×

காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் பேருந்து நிறுத்தத்தில் திறந்த வெளியில் காத்திருக்கும் பயணிகள்: நிழற்குடை அமைக்க வலியுறுத்தல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் திறந்த வெளியில் வெயிலிலும், மழையிலும் காத்திருக்க வேண்டியுள்ளதால் புதிதாக நிழற்குடை அமைக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுளளனர். காஞ்சிபுரத்தில் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப சாலை விரிவாக்கம் செய்யப்படாததால், நகரின் பெரும்பாலான பகுதிகளில் வாகன நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.

காலை மற்றும் மாலை நேரங்கள், முகூர்த்த நாட்களில் வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் கோயில்களுக்கு வருவதாலும், பட்டு சேலைகள் எடுக்க ஏராளமானோர் குவிவதாலும் காந்தி சாலை, மூங்கில் மண்டபம், கீரை மண்டபம், மேட்டுத்தெரு ஆகிய பகுதிகள் எப்போதும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படுகிறது.  இந்நிலையில், விளக்கொளி பெருமாள் கோயில் தெரு, காந்தி சாலை, திருக்கச்சி நம்பி தெரு, விஜயகிராமணி தெரு ஆகிய 4 சாலைகள் சந்திக்கும் பகுதியாக விளங்கும் ரங்கசாமி குளம் சந்திப்பு பகுதியில் வாலாஜாபாத் வழியாக தாம்பரம், செங்கல்பட்டு செல்லும் பயணிகள் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் என ஏராளமானோர் ரங்கசாமி குளம் சந்திப்பு பகுதியில் காத்திருந்து பேருந்துகளில் செல்கின்றனர்.

இங்கு பேருந்து நிழற்குடை இல்லாததால் திறந்த வெளியில் மழை மற்றும் வெயில் காலங்களில் காத்திருக்க வேண்டியுள்ளதாக பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இப்பகுதியில், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் ரங்கசாமி குளம் பகுதியில் ஏற்கனவே இருந்த பேருந்து நிழற்குடை அகற்றப்பட்டு மாநகராட்சி சார்பில் ரவுண்டானா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இதுவரை பணிகள் தொடங்கப்படாமல் உள்ள நிலையில், தற்போது உள்ள இடத்தில் இருந்து சற்று தள்ளி பேருந்து நிழற்குடை அமைத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், பயணிகள் காத்திருந்து பேருந்தில் ஏறுவதற்கும் வசதியாக இருக்கும் என பயணிகள் தெரிவிக்கின்றனர்.

The post காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் பேருந்து நிறுத்தத்தில் திறந்த வெளியில் காத்திருக்கும் பயணிகள்: நிழற்குடை அமைக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Rangasamy pool ,Kancheepuram ,Kanchipuram ,Rangasami Pool ,
× RELATED உலகத்திலேயே அண்ணாமலை தான் மிகப்பெரிய...